லக்னோ: உத்தரகாண்ட், கோவா சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. உ.பி.யில் 2ஆம் கட்ட தேர்தலும் தொடங்கி நடைபெற்றது.
கோவா
கோவா சட்டப்பேரவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. "கோவா மாநிலத்தில் காலையில் இருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாங்கள் மிக அதிகமான விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கிறோம்," என கோவா தலைமைத் தேர்தல் ஆணையர் குனால் தெரிவித்தார்.
பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என 4 முக்கிய கட்சிகள் களமிறங்கியுள்ளதால் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்து வருகின்றனர்.
உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.
அங்கு மொத்தம் 81,72,173 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 11,697 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் முதல்வரும் கடிமா தொகுதி பாஜக வேட்பாளருமான புஷ்கர் சிங் தாமி தனது வாக்கை செலுத்திவிட்டு அளித்தப் பேட்டியில் நமது அனைத்து திட்டங்களும் உத்தராகண்ட் மாநில மக்களுக்கு பெருந்துணையாக இருக்கிறது.
மக்கள் யார் வளர்ச்சியை உறுதி செய்வார்கள் எனத் தெரிந்துவைத்துள்ளனர். உத்தரகாண்ட் மக்கள் பாஜகவுக்கு 60க்கும் மேற்பட்ட தொகுதிகளைப் பெற்றுத்தருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசம்
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் கடந்த 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக சஹாரன்பூர், பிஜ்னோர், மொரதாபாத், சம்பல், ராம்பூர், அம்ரோஹா, படாவுன், பரெய்லி மற்றும் ஷாஜஹான்பூர் ஆகிய 9 மாவட்டங்களுக்குட்பட்ட 55 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. தொற்றுப் பரவல் அச்சம் இருந்தும் மக்கள் வாக்களிக்க ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்துச் சென்றனர்.
உ.பி.யில் ஆளும் பா.ஜ.க.,வை எதிர்த்து காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்கியுள்ளன.
கோவா மாநில சட்டமன்றத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.18 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகக் கூறப்படுகிறது.
நேற்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச சட்டமன்ற 2ஆம் கட்டத் தேர்தலில் 51.93 விழுக்காட்டு வாக்குகளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரேகட்டமாக நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் 49.24 விழுக்காட்டு வாக்குகளும் பதிவாகியிருந்ததாகத் தெரிகிறது.

