ரயில் வந்துகொண்டிருந்தபோது தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டவரின் மோட்டார்சைக்கிள் சுக்குநூறாக சிதறிய நிலையில், அதை ஓட்டியவர் நூலிழையில் உயிர்தப்பியதைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், மும்பை நகரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் வந்துகொண்டிருந்தபோது இருபக்கமும் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. இருப்பினும், அவசரத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஆடவரின் மோட்டார்சைக்கிள் ரயிலில் சிக்கி சின்னாபின்னமானது.
இந்தச் சம்பவம் பிப்ரவரி 12ஆம் தேதி நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அவசரமாக தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மோட்டார்சைக்கிளோட்டி, ரயில் நெருங்கிவிட்டதைப் பார்த்து கடைசி நேரத்தில் மோட்டார் சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு நகர்ந்துவிட்டார். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.
"பொறுமையிழந்த ஓட்டுநர்களிடமும் சட்டத்தை மீறுபவர்களிடமும் இந்தக் காணொளிகளைக் காண்பிக்க வேண்டும். ரயில்வே சந்திப்புகளில் தடைகளைத் தாண்டிச்செல்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்று இணையவாசிகள் பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு சம்பவத்தைக் காட்டும் காணொளியும் தற்போது பரவலாகி வருகிறது.

