கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த இரண்டு ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த அனைத்துவிதமான கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு தளர்த்தியுள்ளது.
இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக இங்குதான் இதுபோன்ற அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பரவலுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்துவதும் தளர்த்துவதுமாகவும் இந்திய மாநிலங்கள் அறிவித்து வந்தன.
தற்போது கொவிட்-19 தொற்று வெகுவாக குறைந்த நிலையில், நாட்டின் முதல் மாநிலமாக அசாமில் அனைத்து கொவிட்-19 கட்டுப்பாடுகளையும் பிப்ரவரி 15 முதல் நீக்கியுள்ளது.
ஆனாலும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளைச் சுத்தம் செய்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயமாக உள்ளன. மற்றபடி விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், பொது இடங்கள், திருமணம், இறுதிச் சடங்கு உள்ளிட்டவற்றுக்கான கட்டுப்பாடுகளை அம்மாநிலம் நீக்கியுள்ளது.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் 27,409 என்றளவில் அன்றாட கொவிட்-19 தொற்று பதிவாகியிருந்தது.
இந்நிலையில் ேநற்று இது சற்று அதிகரித்து மீண்டும் 30,615ஆக பதிவாகியுள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்று மீண்டும் தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்தது. நேற்று புதிதாக
756 பேருக்கு தொற்று உறுதியானது.
மேற்கு வங்கம்: மாநிலம் முழுவதும் கொவிட்-19 தொற்று பாதிப்புகள் குறைந்துவரும் நிலையில் அங்கு அனைத்து தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை மீண்டும் திறக்க அம் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கொவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகள் திறக்கப்பட்டாலும், பிப்ரவரி 28ஆம் தேதி வரை நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரையிலான இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

