மும்பை: மகாராஷ்டிர அரசைக் கவிழ்ப்பதற்காக மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துவதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார். மும்பையில் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணித் தலைவர்களைக் குறிவைத்து மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இந்த அழுத்தங்களுக்கெல்லாம் அடிபணிய மாட்டோம் என்றும் சஞ்சய் ராவத் கூறினார்.
"பாஜகவைச் சேர்ந்த சில தலைவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, மகாவிகாஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டனர். அவ்வாறு செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதற்குப் பிறகு, அமலாக்கத்துறை அதிகாரிகள், எனக்கு நெருக்கமானவர்களைக் குறிவைக்கத் தொடங்கினர்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்க்க மத்திய விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். இதை மறைந்த தலைவர் பால் தாக்கரே எங்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளார். மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது.
"பாஜக முன்னாள் எம்.பி. கிரித் சோமையாவின் மகன் நீல் சோமையா, பிஎம்சி வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட ராகேஷ் வாத்வானின் வர்த்தகப் பங்காளியாக இருக்கிறார்.
"பிஎம்சி வங்கி மோசடி வழக்கில் கிரித் சோமையா மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட வேண்டும்.
"இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் சமர்ப்பித்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துள்ளேன். இன்னும் இரண்டு, மூன்று நாள்களுக்குள் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்போவதாக முதல்வர் கூறியுள்ளார்," என்றும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

