பெங்களூரு: ஹிஜாப் விவகாரம் தொடர்பாக முதல்வர் பசவராஜ் பொம்மையை முஸ்லிம் சமூகத்தை சோ்ந்த எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள் பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து பேசினர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யு.டி.காதர், தன்வீர் சேட், ஜமீர்அகமதுகான், ரகீம்கான், என்.ஏ.ஹாரீஷ், ரிஸ்வான் ஹர்ஷத், கனீஷ் பாத்திமா, எம்.எல்.சி.க்கள் சலீம் அகமது, நசீர் அகமது ஆகியோர் சந்தித்தனர். அப்போது அவர்கள், வருகிற பட்ஜெட்டில் முஸ்லிம் சமூகத்தின் மேம்பாட்டிற்கு அதிக நிதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஹிஜாப் விவகாரம் குறித்தும் விவாதித்தனர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சலீம் அகமது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "ஹிஜாப் விவகாரத்தின் பின்னணியில் சில அமைப்புகள் இருக்கின்றன. அத்தகைய அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். அதற்கு முதல்வர், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இதுகுறித்து விவாதித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்று உறுதியளித்தார். ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை அனுமதிக்காமல் இருப்பது சரியல்ல என்றும் நாங்கள் தெரிவித்தோம். இதை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். இதுகுறித்து உரிய உத்தரவு பிறப்பிப்பதாக முதல்வர் கூறினார்," என்றார் சலீம்.

