அமராவதி: கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மருத்துவமனை ஊழியர் உட்பட 61 பேரை ஆந்திர காவல்துறை கைது செய்துள்ளது.
ஆந்திராவின் குண்டூர் பகுதியைச் சேர்ந்த அந்தச் சிறுமியும் அவரது தாயும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுப் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டனர். சிறுமியின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், அம்மருத்துவமனையில் பணிபுரியும் சுவர்ணகுமாரி என்பவர், நாட்டு மருந்து மூலம் கொரோனா தொற்றைக் குணப்படுத்திவிடலாம் என்று சிறுமியின் தந்தையிடம் கூறி உள்ளார்.
அதை நம்பிய அவர் தன் மகளை சுவர்ணகுமாரியிடம் ஒப்படைக்க, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிறுமியை குண்டூரில் இருந்து கடத்தினார் சுவர்ணகுமாரி.
பின்னர் விஜயவாடா, நெல்லூர், ஹைதராபாத் எனப் பல்வேறு நகரங்களுக்கு சிறுமியைக் கொண்டு சென்று, பாலியல் தொழிலில் வலுக் கட்டாயமாக ஈடுபடுத்தி உள்ளார்.
இதனால் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைய, அப்போதும் சுவர்ணகுமாரி விட வில்லை. ஏறத்தாழ ஆறு மாத காலம் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான அந்தச் சிறுமி, சில தினங்களுக்கு முன்பு எப்படியோ சுவர்ணகுமாரியின் கும்பலிடம் இருந்து தப்பித்து தன் தந்தையைச் சென்றடைந்தார்.
மகளின் நிலையைக் கண்டு பதறிப்போன அவர், காவல்துறையில் புகார் அளிக்க, அதன் பின்னர் நடந்த தீவிர விசாரணையின் போது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய, சிறுமியை சீரழித்த 61 பேர் அடுத்தடுத்து கைதாகி உள்ளனர்.

