லக்னோ: வீட்டுக் கிணற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தளம் திடீரென உடைந்ததால் அதன் மீது அமர்ந்திருந்த 13 பெண்கள் கிணற்றில் விழுந்து பலியாகினர்.
இந்தச் சோகச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமணத்தின்போது நிகழ்ந்துள்ளது.
மணமகள் வீட்டில் நடைபெற்ற அந்தத் திருமணத்தில் பங்கேற்க ஏராளமான விருந்தினர்கள் வந்திருந்தனர். பெண்கள் பலர் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தளம் வலுவாக இருப்பதாகக் கருதி அதன் மீது அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
முதலில் நான்கைந்து பெண்கள் மட்டுமே இருந்த நிலையில், நேரமாக ஆக அந்த எண்ணிக்கை அதிகரித்தது. அவர்களில் சில சிறுமிகளும் அடங்குவர்.
இந்நிலையில் பாரம் தாங்காமல் அந்தக் கான்கிரீட் தளம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அதன் மீது அமர்ந்திருந்த பெண்கள் அனைவருமே ஆழமான கிணற்றுக்குள் விழுந்தனர்.
ஆழமான கிணறு என்பதால் அங்கிருந்தவர்களால் கிணற்றில் விழுந்தவர்களை மீட்க முடியவில்லை. இதையடுத்து காவல்துறைக்கும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்பு மீட்புப் படையினர் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் பதினைந்துக்கும் மேற்பட்ட பெண்களும் சிறுமிகளும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். எனினும், 13 பெண்கள் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர். இதனால் திருமண வீடு சோகம் நிறைந்து காணப்பட்டது.

