வரி ஏய்ப்புப் புகார்: வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை
புதுடெல்லி: சீனாவின் ஹுவாவேய் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இந்திய அலுவலகங்களில் வருமான வரித்துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரி ஏய்ப்பு தொடர்பாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் அனைத்து சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டு செயல்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் இயங்கி வரும் பல சீன நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து அதிரடிச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவேய்க்கு டெல்லி, குருகிராம், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. இந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக எழுந்துள்ள புகாரை அடுத்து இந்த அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனை நடவடிக்கை நேற்று, இரண்டாவது நாளாக நீடித்தது.
அப்போது முக்கிய நிதி ஆவணங்கள், வரவு செலவுப் புத்தகங்கள், அந்நிறுவனத்தின் இந்திய வணிகம், பணப்பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்கள் பல பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தச் சோதனை நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஹுவாவேய் நிறுவனம், வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை குறித்தும் அலுவலகத்தில் நடக்கும் விசாரணை குறித்தும் தாங்கள் அறிந்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் அனைத்து சட்டங்கள், விதிமுறைகளை கடைப்பிடித்து செயல்படுவதில் உறுதியாக உள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் செயல்பட்டு வரும் சீன கைபேசி உற்பத்தி நிறுவனங்களிலும் வரி ஏய்ப்பு தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

