புதுடெல்லி: எதிர்வரும் ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் 'நெகிழி' (பிளாஸ்டிக்) பொருள்களைப் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தடையை மீறினால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் மத்திய அரசால் அடையாளம் காணப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தும் வகையிலான நெகிழிப் பொருள்களின் உற்பத்திக்கு ஜூலை முதல் தேதியில் இருந்து தடை விதிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நெகிழிப் பொருள்களின் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பயன்படுத்துதல் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்படுவதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.
நெகிழி மூலம் தயாரிக்கப்படும் சிறிய ரக காது குடையும் குச்சிகள், கொடிகள், ஐஸ் கிரீம் குவளைகள், ஸ்ட்ரா, ஸ்பூன், சிகரெட் அட்டைகள், நூறு மைக்ரானுக்கும் குறைவாக உள்ள பொருள்கள் ஆகியவையும் தடை செய்யப்பட்ட பொருள்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் வணிகர்கள் மேற்குறிப்பிட்ட பொருள்களின் விற்பனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அதன் பின்னர் இவற்றை வைத்திருந்தாலோ, விநியோகம் செய்தாலோ கடும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் உரிய அபராதம் விதிக்கப்படும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சு அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவித்துள்ளது.

