புதுடெல்லி: முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கேரள அரசு வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடிக்கு மேல் அதிகரிக்கப்படக் கூடாது என கேரள அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் அணையின் பாதுகாப்பு குறித்து கேரளா வீண் அச்சத்தைக் கிளப்புவதாகவும் அணையின் நீர்மட்டம் 142 அடியாக இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கூறுகிறது.
இதையடுத்து இருதரப்பும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன.
இதற்கிடையே, முல்லைப் பெரியாற்றில் கேரளா அரசு சார்பில் புதிய அணை கட்டப்படுவது உறுதி என அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்த்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், ஐந்து நதிகள் இணைப்புத் திட்டம் தொடர்பாக ஆறு மாநிலங்களுடன் மத்திய அரசு நேற்று ஆலோசனை நடத்தியது.
கோதாவரி, காவிரி இணைப்பு உட்பட ஐந்து நதிகள் இணைப்புத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மத்திய நீர்வள அமைச்சு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களின் நீர்வளத் துறையின் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஐந்து நதிகள் இணைப்புத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது, அதன் சாதக பாதகங்கள் என்ன என்பது குறித்து மாநிலங்களிடம் கருத்து கேட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

