நூறு விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி: கோவாவில் சாதனை
பானாஜி: கோவாவில் நூறு விழுக்காடு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்களின் உதவியுடன் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக அத்துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "மாநிலத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடைய பொதுமக்கள் அனைவருக்கும் இரண்டு தடுப்பூசிகளும் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 1.1 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது," என அம்மாநில ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்தார்.
செங்கோட்டையில் காவிக் கொடி: எம்எல்ஏ பேச்சுக்கு கடும் எதிர்ப்பு
பெங்களூரு: செங்கோட்டையில் ஒரு நாள் காவிக் கொடி பறக்கும் என்று கர்நாடக மாநில சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்எல்ஏ ஈஸ்வரப்பாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. மேலும், நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, சட்டப்பேரவையிலேயே தங்கியிருந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தான் மிகச்சிறந்த தேச பக்தர் என்றும் ஈஸ்வரப்பா கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் கணவர்களால் கைவிடப்படும் இந்தியப் பெண்கள்
புதுடெல்லி: வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்திய கணவர்கள் தங்கள் மனைவியை விவாகரத்து செய்வது அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் 2,156 இந்தியப் பெண்கள் வெளி நாட்டில் தங்கள் கணவர்களால் கைவிடப்பட்டுள்ளனர் என்றும் இது தொடர்பான வழக்குகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 615 வழக்குகளும் ஐக்கிய அமீரக சிற்றரசில் 586 வழக்குகளும் சவூதி அரேபியாவில் 119 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாணவிகளுக்கு இலவச இருசக்கர வாகனம்: பாஜக தேர்தல் வாக்குறுதி
இம்பால்: தேர்தலில் வெற்றி பெற்றால் கல்லூரி மாணவிகளுக்கு இலவச இருசக்கர வாகனம் வழங்கப்படும் என மணிப்பூர் மாநில பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. அம்மாநிலத்தில் எதிர்வரும் 28ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இரண்டு இலவச சமையல் எரிவாயு உருளைகள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை, மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் அதிகரிக்கப்படும், 12ஆம் வகுப்பில் சிறப்பாகத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பங்குச்சந்தையில் விதிமீறல்: சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை
புதுடெல்லி: தமது பதவிக்காலத்தில் விதிமீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். தேசிய பங்குச்சந்தையில் பணி நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட நடைமுறைகளில் அவர் விதிமீறலில் ஈடுபட்டதாக சித்ரா ராமகிருஷ்ணா மீது புகார் எழுந்துள்ள நிலையில், அவருடன் தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து தேசிய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நடத்திய விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணா விதிமுறை மீறலில் ஈடுபட்டது உறுதியானதை அடுத்து, அவருக்கு மூன்று கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
'நான் உலகின் இனிமையான தீவிரவாதி'
புதுடெல்லி: தாம் ஒரு தீவிரவாதி என்று சித்திரிக்கப்படுவதாக வும் அது உண்மை என்றால் பிரதமர் மோடி தம்மைக் கைது செய்திருக்க வேண்டும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். "நான் மக்களுக்காக பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், மின்சாரம், சாலைகள், குடிநீர் வழங்கி வரும் உலகின் இனிமையான தீவிரவாதி," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

