தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐக்கிய அரபுச் சிற்றரசுகள்-இந்தியா பயணம்: தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு பிசிஆர் பரிசோதனையில் இருந்து விலக்கு

1 mins read
e1bc89e5-bff9-4f2c-8d19-44388bf96535
படம்: பிடிஐ -

கொவிட்-19க்கு எதிராக இந்தியாவில் இரு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட பயணிகள், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இருந்து இந்தியாவுக்குத் திரும்புவதற்கு முன்பு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கான தனது பயண ஆலோசனையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இரு கொவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டோருக்கு மட்டுமே இந்த விலக்கு பொருந்தும் என்பதை அது தெளிவுபடுத்தியது.

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்குச் சென்று நாடு திரும்பும் குறுகியகால வருகையாளர்கள் இந்த அறிவிப்பால் பயனடைவர்.

பயணிகள், இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள தங்களது கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழை ஏர் சுவிதா இணையத்தளத்தில் (https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்வோர், அங்கு சென்றிங்கியதுடன் நடப்பில் இருந்து வந்த ஏழு நாள் கட்டாயத் தனிமை உத்தரவு அண்மையில் நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

என்றாலும், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோர், இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

"மற்ற பயணிகள் அனைவரும் தொற்று இல்லை என்பதைக் குறிப்பிடும் ஆர்டி-பிசிஆர் சான்றிதழை ஏர் சுவிதா இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்," என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கூறியது.

"இந்த விதிகளைப் பின்பற்றத் தவறுவோர் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்படும்," என்றும் அது சொன்னது.

குறிப்புச் சொற்கள்