புதுடெல்லி: ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி வருவதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
அண்மையில், காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட ஒரு பயங்கரவாதியிடம் இருந்து அமெரிக்க ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதன் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராணுவ மேஜர் ஜெனரல் அஜய் சந்த்புரா கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் நாடு திரும்பியபோது, அவர்கள் ஏராளமான ஆயுதங்களை விட்டுச் சென்றதாகவும் அவை இப்போது பயங்கரவாதிகளிடம் இருப்பதாகவும் அஜய் சந்த்புரா கூறினார்.
"அண்மையில் நமது பாதுகாப்புப் படையினரால் காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் நவீன ஆயுதங்களும் தகவல் தொடர்புக் கருவிகளும் கைப்பற்றப்பட்டன. இரவிலும் பயன்படுத்தக்கூடிய திறன்மிக்க தளவாடங்கள், ஆயுதங்களை பாகிஸ்தான் வழியாக காஷ்மீருக்குள் கொண்டு வருவதே பயங்கரவாதிகளின் திட்டம். அமெரிக்கப் படைகள் ஆப்கானை விட்டு வெளியேறியதும் காஷ்மீரிலும் நிலைமை மாறியுள்ளது," என்றார் அஜய் சந்த்புரா.
காஷ்மீரில் ஏற்கெனவே இருநூறு பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கக்கூடும் என்று குறிப்பிட்ட அஜய் சந்த்புரா, அவர்களில் 45 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார்.
"காஷ்மீருக்குள் ஊடுருவ மேலும் 130 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் தயார் நிலையில் உள்ளனர். எல்லையில் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளதால் அவர்களால் காஷ்மீருக்குள் எளிதில் ஊடுருவ முடியவில்லை. இந்தக் கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டு தொடர்ந்து நீடிக்கும்," என்றார் அஜய் சந்த்புரா.
இதற்கிடையே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காஷ்மீரிலும் ராஜஸ்தானிலும் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
காஷ்மீரில் சோபோர், குப்வாரா உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள எட்டு இடங்களிலும் ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்திலும் இந்தச் சோதனை நடைபெற்றதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள், மின்னிலக்க கருவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
காஷ்மீரிலும் டெல்லியிலும் தாக்குதல் நடத்த சதி செய்ததாக சில பயங்கரவாத அமைப்புகள் மீது சில வழக்குகள் பதிவாகி உள்ளன. இதையடுத்து 28 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

