புதுடெல்லி: இரு நாடுகளின் எல்லையில் உள்ள நிலவரத்தைப் பொறுத்தே இந்தியா, சீனா இடையேயான உறவு தீர்மானிக்கப்படுவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் (படம்) தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லைப் பிரச்சினை தொடர்பாக செய்து கொண்ட ஒப்பந்தங்களை சீனா பலமுறை மீறிவிட்டதாகச் சுட்டிக்காட்டினார்.
"கடந்த 45 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை நிர்வாகம் நிலையானதாக இருந்தது. 1975 முதல் எல்லையில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை.
"எல்லையில் படைகள் குவிக்கப்படக்கூடாது என்று ஒப்பந்தம் செய்துகொண்டோம். ஆனால் சீனா அதை மீறியது.
"எல்லையின் நிலைதான் உறவின் நிலையைத் தீர்மானிக்கும் என்பது இயற்கையானது.
"சீனா உடனான உறவு தற்போது கடினமான கட்டத்தில் உள்ளது. இந்தியாவுடனான எழுத்துபூர்வ ஒப்பந்தங்களை கடந்த 2020ஆம் ஆண்டு சீனா புறக்கணித்தது," என்றார் அமைச்சர் ஜெய்சங்கர்.

