பெங்களூரு: வேளாண் துறையில் ஆளில்லா சிறிய ரக வானூர்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் புதிய புரட்சி தொடங்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பூச்சிக் கொல்லிகள், உரங்கள் தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் இனி ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படும் என்றும் வேளாண் நிலம் சார்ந்த பதிவுகள் மின்னிலக்கமயமாக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அண்மையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆளில்லா வானூர்திகளை வேளாண் பணிகளில் ஈடுபடுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தின் சேலம் மாவட்டம் உட்பட, நாடு முழுவதும் நூறு இடங்களில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை தெளிப்பதற்கு இந்த வானூர்திகள் பயன்படுத்தப்படும்.
தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, இப்புதிய திட்டம் மூலம் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும், கொள்கைகள் சரியாக இருந்தால் நாடு எவ்வளவு உயரத்தில் பறக்க முடியும் என்பதற்கு இத்திட்டம் ஓர் எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிட்டார்.
மத்தியப் பிரதேசம் இந்தூரில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய சாண எரிவாயு ஆலையை பிரதமர் மோடி நேற்று முன்தினம் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் குப்பை இல்லா நகரங்களை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

