மணமகனுடன் ஆற்றில் கவிழ்ந்த கார்: ஒன்பது பேர் பரிதாப பலி
ஜெய்ப்பூர்: மணமகனுடன் சென்ற கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மணமகன் உட்பட அதில் பயணம் செய்த ஒன்பது பேரும் பலியாகினர். இந்த விபத்து ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியில் நேற்று காலை நிகழ்ந்தது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினி பகுதியில் நடைபெற இருந்த திருமண விருந்து நிகழ்வில் பங்கேற்க ராஜஸ்தானில் இருந்து மணமகனின் குடும்பத்தாரும் நண்பர்களும் காரில் சென்றனர். காலை சுமார் ஏழு மணியளவில் அந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சம்பல் ஆற்றில் கவிழ்ந்தது.
80 வயதிலும் சமூக சேவை செய்யும் சித்ரலேகா ரூ.1 கோடி நன்கொடை
கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பஹுயாட்டி பகுதியைச் சேர்ந்தவர் சித்ரலேகா மாலிக். ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள இவர் 350 சதுர அடி மட்டுமே உள்ள சிறிய வீட்டில் வசிக்கிறார். ஓய்வூதியமாக மாதம் 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. சிக்கனமாக வாழ்ந்து பணத்தை சேமித்து தமது 80வது வயதிலும் தாம் படித்த பல்கலைக்கழகத்துக்கு கடந்த 2018ஆம் ஆண்டு ரூ.56 லட்சம் வழங்கி உள்ளார். பணி ஓய்வின் போது கிடைத்த ரூ.31 லட்சத்தை இந்திய ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இவ்வாறு ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளாராம். மேலும் தமது ஓய்வூதியத்தில் இருந்து ஏழைகளுக்கும் வசதியற்ற மாணவர்களின் கல்விக்கும் உதவி வருகிறார் சித்ரலேகா.
கால்நடை கடத்தி பல கோடி மோசடி
புதுடெல்லி: எல்லை தாண்டி கால்நடைகளைக் கடத்தி ரூ.179 கோடி மோசடி செய்ததாக முகமது இனாமுல் ஹக் என்பவரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இந்திய, வங்கதேச எல்லை வழி சட்ட விரோதமாக கால்நடைகளைக் கடத்திய இவருக்கு எல்லை பாதுகாப்புப் படையினர் சிலர் உதவியதாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவர் டெல்லி நீதிமன்றத்தில் முன்னி லைப்படுத்தப்பட்டார். அவர் வெளிநாடுகளில் வாங்கியுள்ள சொத்துகள் குறித்து விசாரிப்பதற்காக பிப்ரவரி 26ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

