சண்டிகர்: சமூக ஊடகங்கள் மூலம் உத்தரவுகளைப் பெற்று பலரைப் படுகொலை செய்த கும்பலைச் சேர்ந்தவர் மூவர் பஞ்சாப் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் செயல்படும் சில பயங்கரவாத அமைப்புகளுடன் இக்கும்பல் தொடர்பில் இருந்துள்ளது.
கனடா, ஆஸ்திரேலியாவில் உள்ள அமைப்புகளைச் சேர்ந்த சிலர், இம்மூவரையும் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்புகொண்டு, யாரை, எப்போது, கொலை செய்ய வேண்டும் என விவரங்களை அளித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம், சோனிபத் மாவட்டத்தில் ஜுவான் கிராமத்தைச் சேர்ந்த அம்மூவரும் சம்பந்தப்பட்டவரை கொலை செய்த பின்னர் சொந்த கிராமத்துக்கு திரும்பிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
கொலை செய்ததற்கான கூலித்தொகையை அந்த வெளிநாட்டு அமைப்புகள் மூவரின் வங்கிக் கணக்குகளில் செலுத்தி உள்ளது.
அண்மையில் இந்தக் கூலிப்படை குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைக்க, அதன் பேரில் ரகசியமாக விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது வெளிநாடுகளில் இருந்து மூவரும் ரூ.6 லட்சம் பெற்றது தெரியவந்தது.
கடந்த டிசம்பர் 8ஆம் தேதி கூலிப்படையைச் சேர்ந்த மூவரும் மொரீண்டா நகரில் ஒருவரை படுகொலை செய்ததை அடுத்து, காவல்துறை அவர்களை அதிரடியாகக் கைது செய்தது.
அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து ஆயுத சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விசாரணையில் மூவருக்கும் 'காலிஸ்தான் டைகர் படை', 'அனைத்துலக சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு' உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடனும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இம்மூவரும் இதுவரை நான்கு பேரை கொலை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என காவல்துறை கருதுகிறது.

