திருமண வைபவங்களுக்கு ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுப்பது இந்தியாவில் பிரபலமடைந்துவரும் போக்காக உள்ளது. அதுவும், ஹெலிகாப்டரை ஒரு மணி நேரம் வாடகைக்கு எடுக்க பலர் ரூ.100,000க்குமேல் கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர்.
அவ்வளவு பெரிய தொகை இல்லாவிடில் என்ன செய்வது? கவலை வேண்டாம். இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குடு ஷர்மாவிடம் சிறந்ததொரு தெரிவு உள்ளது. வாகனங்களைப் பழுதுபார்க்கும் வேலை செய்யும் அவர், தம்முடைய சொந்த பணத்தில் ரூ.200,000 செலவு செய்து 'டாட்டா நானோ' காரை ஒரு ஹெலிகாப்டராக மாற்றியமைத்தார்.
ஹெலிகாப்டரைப் போன்று தோற்றம் அளித்தாலும், அதில் பறக்க முடியாதாம். அப்படி இருந்தும், பொழுதுபோக்கு பயணத்திற்காக ரூ.15,000 செலுத்தி இந்த வாகனத்தை வாடகைக்கு எடுக்க முடியும் என்பதால் திருமணத்திற்காக பலரிடம் இருந்தும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
ஷர்மாவின் இந்தப் புத்தாக்கத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அவருடைய ஹெலிகாப்டரை இதுவரை குறைந்தது 19 பேர் வாடகைக்கு எடுத்துள்ளனர்.
வித்தியாசமான தோற்றத்திற்காக காரை ஹெலிகாப்டராக மாற்றியமைக்கும் போக்கு பலரிடத்தில் பிரபலமடைந்து வருகிறது.


