இரண்டாயிரம் பேர் ஏமாந்தனர்; ரூ.40 கோடி சுருட்டல்
நாக்பூர்: மின்னிலக்கப் பணத்தில் (கிரிப்டோ கரன்சி) முதலீடு செய்யுமாறு கூறி சுமார் 40 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக ஏழு பேரை நாக்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே நான்கு பேர் கைதாகி இருந்தனர்.
உலகம் முழுவதும் மின்னிலக்கப் பணப் பரிமாற்றம் தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. சில நாடுகள் கிரிப்டோ கரன்சிக்குத் தடைவிதித்துள்ள நிலையில், இந்தியாவில் இந்த வகை பணத்துக்கு வரி விதிக்கப்பட உள்ளது. இந்நிலையில் மின்னிலக்கப் பணம் தொடர்பாகப் பல்வேறு மோசடி வேலைகள் நடந்து வருகின்றன.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் சுமார் இரண்டாயிரம் பேரை மின்னிலக்கப் பணத்தில் முதலீடு செய்யுமாறு ஒரு கும்பல் தூண்டிவிட்டு மோசடி செய்துள்ளது.
இந்த மோசடியின் மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் நிஷித் வாஸ்னிக் என்பவரும் அவரது மனைவியும் இரு தினங்களுக்கு முன்னர் கைதாகினர். பின்னர் அவர்களுடைய கூட்டாளிகள் இருவரும் சிக்கினர்.
இப்போது மேலும் ஏழு பேர் சுற்றி வளைக்கப்பட்டதை அடுத்து, கைதானவர்களின் எண்ணிக்கை 11ஆக கூடியுள்ளது.
இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், மகாராஷ்டிரா முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவாகி உள்ளது.
தம்மை பெரிய நிறுவனத்தின் நிர்வாகியைப் போல் காட்டிக்கொண்டு ஆடம்பரமாக வலம் வந்த நிஷித் வாஸ்னிக், மின்னிலக்கப் பணத்தைக் கையாளும் குறிப்பிட்ட நிறுவனம் ஒன்றில் பலரை முதலீடு செய்யும்படி தூண்டிவிட்டுள்ளார்.
மேலும், முதலீடுகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்குப் பல தந்திரங்களையும் கையாண்டுள்ளார்.
நிறுவனத்தின் மீது செய்யப்பட்ட முதலீடுகளின் மூலம் திரண்ட பணத்தை நிஷித் வாஸ்னிக் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதாகவும் கடந்த 2017 முதல் 2021 வரை அவர் இந்த மோசடி வேலையில் ஈடுபட்டதாகவும் கூறப் படுகிறது.
பல கோடி ரூபாயை இவ்வாறு சுருட்டிய பின்னர் சில மாதங்களுக்கு முன்பு, திடீரென மாயமானார் நிஷித். இதையடுத்து, அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் புனே மாவட்டத்தில் இருப்ப தாகத் தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

