பாட்னா: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 1990 முதல் 1997ஆம் ஆண்டு வரை பீகார் முதல்வராக பதவி வகித்தபோது, கால்நடைகளுக்குத் தீவனம் வாங்கியதாகக் கூறி ரூ.950 கோடி பணத்தை அரசுக் கருவூலத்தில் இருந்து எடுத்து மோசடி நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது.
இந்நிலையில் பீகார் அரசின் டோரண்டா கருவூலத்தில் இருந்து ரு. 139 கோடி பணத்தை முறைகேடாக எடுத்த வழக்கில் ராஞ்சி நீதிமன்றம் லாலு பிரசாத்தை குற்றவாளி என அறிவித்தது. கடந்த மாதம் இந்த வழக்கில் 75 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி லாலு பிரசாத் யாதவுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனையும் 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

