லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நடப்பு ஆளுங்கட்சியின் அனைத்து வகையான ஏமாற்று வேலைகளில் இருந்து மக்கள் விடுபட ஆட்சி மாற்றம் அவசியம் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஆளுங்கட்சியினரின் தவறான கொள்கைகளால் அம்மாநிலத்தில் ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருவதாகச் சாடி உள்ளார்.
இத்தகைய சூழலில் உத்தரப் பிரதேச மக்கள் பகுஜன் சமாஜ் கட்சி அளித்த வாக்குறுதிகள் மீது முழு நம்பிக்கை வைப்பதுதான் சரியான முடிவாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள மாயாவதி, ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்குப் பதிலாக, ஏற்கெனவே இருந்த வேலைகளும் பறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எனவே மாநிலத்தில் உள்ள அனைத்து ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்வதற்குத்தான் இப்போது முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் எனில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் மாயாவதி மேலும் கூறியுள்ளார்.

