குறைந்தது 18 பெண்களைத் திருமணம் செய்துகொண்டு, அவர்களை ஏமாற்றிய 67 வயது ஆடவரை இந்தியக் காவல் துறை கைதுசெய்துள்ளது.
திருமண இணையத்தளங்களில் 51 வயதான மருத்துவர் போல் நடித்து, நல்ல வேலைபார்க்கும் பெண்களை பிபு பிரகாஷ் குறிவைத்து ஏமாற்றி கல்யாணம் செய்துகொண்டார்.
அவர் மணந்த பெண்களில் நிபுணர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஓர் இராணுவ அதிகாரியும் அடங்குவர்.
போலி அடையாள அட்டைகள், பத்திரிகங்கள் ஆகியவற்றை பயன்படுத்தியதோடு, தாம் கைநிறைய சம்பளம் எடுப்பதாகவும் பொய் சொல்லி அவர் பெண்களை ஏமாற்றினார்.
மணம் முடிந்த சில நாட்களில், சாக்குப்போக்குச் சொல்லி மனைவிகளிடமிருந்து நகை, பணத்தை பறித்துகொண்டு பிரகாஷ் ஓட்டம் கண்டுவிடுவார் என்று காவல் துறை சொன்னது.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை அவர் ஏமாற்றியதாகக் காவல் துறை கூறியது. அதற்கு அடையாளமாக பிரகாஷின் கைத்தொலைபேசியில் 'மேடம் டில்லி', 'மேடம் அசாம்', 'மேடம் உத்தரப் பிரேதசம்' என பெண்களின் கைப்பேசி எண்கள் சேமிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
10 மாநிலங்களைச் சேர்ந்த குறைந்தது 27 பெண்களை அவர் திருமணம் செய்திருக்ககூடும் என இந்திய நாளிதழ் ஒன்று குறிப்பிட்டது.
ஒரிசாவைச் சேர்ந்த பிரகாஷ் முதன்முதலாக 1978ஆம் ஆண்டு கல்யாணம் புரிந்துகொண்டதாகவும், முதல் மனைவியுடன் அவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் கூறப்பட்டது.
பிரகாஷின் சதி வலையில் வேறு சிலருக்கும் பங்குயிருப்பதாகக் காவல் துறை சந்தேகிக்கிறது.

