செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
4236cfd8-b3bb-4331-9cb1-41e88e3d2fd4
-

இன்று உத்தரப் பிரதேச தேர்தல்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 4வது, இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 403 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் ஏற்கெனவே 3 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது.

லக்னோ, ரேபரலி, லகிம்பூர் உள்ளிட்ட 59 தொகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தலில் 624 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

லாலுவின் உடல்நிலை மோசம்

ராஞ்சி: 5வது கால்நடை தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவிற்கு நேற்று முன்தினம் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து மருத்துவர் குழுவின் தலைவர் வித்யாபதி, "லாலு பிரசாத்தின் ரத்த அழுத்தமும் சர்க்கரை அளவும் ஏற்ற இறக்கமாக உள்ளது. அவரது சிறுநீரகம் வெறும் 20 விழுக்காட்டுத் திறனுடன் இயங்கி வருகிறது. அவரது உடல்நிலை மோசமாக உள்ளது," என்றார்.

திரைப்படத்தில் நடிக்கிறார் எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான‌ எடியூரப்பா, 77 'தனுஜா' என்ற கன்னட திரைப்படத்தில் முதல்வர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

"எடியூரப்பா முதல்வராக இருந்த போது நீட் தேர்வை எழுத முடியாமல் கஷ்டப்பட்ட மாணவிக்கு உதவிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தை இயக்கி வருகிறேன். அண்மையில் எடியூரப்பா சம்பந்தமான காட்சிகளை பெங்களூருவில் உள்ள‌ குமராகிருபா அரசினர் விருந்தினர் மாளிகை, முதல்வர் இல்லமான 'காவிரி' ஆகியவற்றில் படமாக்கப்பட்டது," என்றார் திரைப்படத்தின் இயக்குநர் ஹரீஷ் ஹள்ளி.

பேருந்து விபத்து; திருமணத்திற்குச் சென்ற 14 பேர் பலி

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் திருமண நிகழ்விற்குச் சென்றவர்கள் பயணம் செய்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 14 பேர் பலியாகினர்.

உத்தரகாண்டின் சம்பாவத் மாவட்டத்தின் தண்டா பகுதி பள்ளத்தாக்கில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

உடனடியாக, அப்பகுதிக்கு விரைந்த காவல்துறை, மீட்புப் படையினர் பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், விபத்தால் 14 பேர் உயிரிழந்தனர்.

2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம்; இருளில் சண்டிகர்

சண்டிகர்: மின்சாரத் துறையைத் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சண்டிகர் மாநில மின்வாரிய ஊழியர்கள் மூன்று நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். திங்கட்கிழமை முதல் நடந்து வரும் இந்த வேலைநிறுத்தம் காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

குடியிருப்பாளர்கள் இருளில் தவிக்கின்றனர். மருத்துவமனைகளில் அறுவை சிகிக்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் இயங்கவில்லை.