புவனேஸ்வர்: மருத்துவர் என்று கூறி, 18 பெண்களைத் திருமணம் செய்துகொண்டு, அவர்களை ஏமாற்றிய ஆடவரை காவல்துறை கைதுசெய்துள்ளது.
திருமண இணையத்தளங்களில் 51 வயதான மருத்துவர் போல் நடித்து, நல்ல வேலைபார்க்கும் பெண்களைக் குறிவைத்து ஏமாற்றி கல்யாணம் செய்துகொண்டார் பிபு பிரகாஷ் என்பவர். ஆனால் அவர் 67 வயதானவர் என்று கூறப்படுகிறது.
அவர் மணந்த பெண்களில் நிபுணர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஒரு ராணுவ அதிகாரியும் அடங்குவர்.
போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியதோடு, தாம் கைநிறைய சம்பளம் எடுப்பதாகவும் பொய் சொல்லி அவர் பெண்களை ஏமாற்றினார்.
மணம் முடிந்த சில நாட்களில், சாக்குப்போக்குச் சொல்லி மனைவிகளிடமிருந்து நகை, பணத்தைப் பறித்துகொண்டு பிரகாஷ் ஓட்டம் பிடித்துவிடுவார் என்று காவல் துறை சொன்னது.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை அவர் ஏமாற்றியதாகக் காவல் துறை கூறியது.
அதற்கு அடையாளமாக பிரகாஷின் கைத்தொலைபேசியில் 'மேடம் டில்லி', 'மேடம் அசாம்', 'மேடம் உத்தரப் பிரேதசம்' என பெண்களின் கைப்பேசி எண்கள் சேமிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
10 மாநிலங்களைச் சேர்ந்த குறைந்தது 27 பெண்களை அவர் திருமணம் செய்திருக்கக்கூடும் என இந்திய நாளிதழ் ஒன்று குறிப்பிட்டது.
ஒடிசாவைச் சேர்ந்த பிரகாஷ் முதன்முதலாக 1978ஆம் ஆண்டு கல்யாணம் புரிந்துகொண்டதாகவும் முதல் மனைவியுடன் அவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் கூறப்பட்டது.
பிரகாஷின் சதி வலையில் வேறு சிலருக்கும் பங்கு இருப்பதாகக் காவல் துறை சந்தேகிக்கிறது.

