தாம் அழகாக இல்லை என கணவர் திரும்ப திரும்ப குறைகூறியதால், 32 வயது பெண் ஒருவர் உயிரைவிட்ட சம்பவம் ஒன்று இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூரில் நிகழ்ந்தது.
திங்கட்கிழமை (பிப்ரவரி 21) பிற்பகல் இச்சம்பவம் நிகழ்ந்ததாக நியூ இந்திய எக்ஸ்பிரஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டது.
கணவர் நிசாமுதீனுடன் வாழ்ந்து வந்தார் அனிஷா. தாம் அழகாக இல்லை என்று திங்கட்கிழமை கணவர் இடித்துரைத்ததால், மனவேதனை தாங்க முடியாமல் தம்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார் அனிஷா.
இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அண்டைவீட்டார், உடனடியாக தீயை அணைத்து அனிஷாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 22) அவர் உயிரிழந்தார்.
நிசாமுதீனுக்கு எதிராக அனிஷாவின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, நிசாமுதீனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அனிஷா உயிரை மாய்த்துக்கொள்ள காரணமாக இருந்ததன் தொடர்பில் நிசாமுதீனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

