சண்டிகர்: சண்டிகர் மின்வாரிய ஊழியர்கள் கடந்த மூன்று நாள்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனையடுத்து சண்டிகர் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.
அங்குள்ள மின்வாரியக் கழகத்தைத் தனியார் மயமாக்கும் அரசின் திட்டத்தைக் கண்டித்து ஊழியர்கள் கடந்த திங்கள்கிழமை போராட்டத்தில் குதித்தனர்.
மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் வீடுகளில் மக்கள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரத் தடையை அடுத்து சண்டிகரின் பல இடங்களில் தண்ணீர் விநியோகமும் தடைபட்டுள்ளது.
கொவிட் சூழலால் வீடுகளில் தங்கி வேலை பார்ப்போரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள பல மருத்துவமனைகள் ஜெனரேட்டர் மூலம் மின்சாரத்தைப் பெற்று வருகின்றன.
இந்நிலையில் சண்டிகரில் மின்வாரிய ஊழியர்கள் வரும் 6 மாதங்களுக்கு எந்தவொரு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்நகரின் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
சாலைகளில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் இயங்காததால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த மூன்று நாள்களாக சண்டிகரில் பொதுமக்கள் மின்சாரம், குடிநீர் வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசு தரப்பில் இதுவரை நடத்திய பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டன.
இந்த நிலையில் பஞ்சாப், அரியானா நீதிமன்றம், இது குறித்து விசாரிக்க இருதரப்பினரும் முன்னிலையாக உத்தரவிட்டுள்ளது.

