செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f50864cb-d4ec-489b-bf5a-667a247a272c
-

இந்தியாவில் புதிதாக

15,102 பேருக்கு தொற்று உறுதி

புதுடெல்லி: நாடு முழுதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,102 தொற்று பாதிப்பும் 278 தொற்று மரணங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுப் பாதிப்பு நேற்று முன்தினத்தைக் காட்டிலும் 12.6% அதிகம்.

அன்றாட பரவல் 1.28 விழுக்காடு என்றளவில் உள்ளது.

ஒரே நாளில் 31,377 பேர் கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்தனர். தொற்றுப் பாதிப்புக்குச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 49 நாள்களில் நூறாயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் 68% பாலியல் குற்றங்கள்

புதுடெல்லி: கடந்த 2020 டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு 64,520 பேர் விசாரணைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். இதில் 62.8% பேர் (40,545) பலாத்கார வழக்குகளிலும் 22.4% பேர் (14,465) வரதட்சணை தொடர்பான கொலை வழக்குகளிலும் தொடர்புடையவர்கள் ஆவர். 2020ல் கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் சுமார் 90,000 பேர் சிறைத் தண்டனை அனுபவிப்பதாக சிறைத்துறை புள்ளி விவர அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் 14.2 விழுக்காடு பேர் பாலியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

உ.பி.யில் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்டமன்றத்துக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், நேற்று 4ஆம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. ரேபரேலி, லக்கிம்பூர் கெர்ரி, உன்னாவ், லக்னோ உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெறும் வாக்குப்பதிவில் 624 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட லக்கிம்பூர், கொடூர பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த உன்னாவ் மற்றும் காங்கிரசின் முக்கிய தொகுதியான ரேபரேலி உள்ளிட்டவை இன்று வாக்குப்பதிவைச் சந்திக்கும் முக்கிய இடங்களாக உள்ளன. இந்தத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான அலை வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (படம்: ஊடகம்)