உக்ரேனில் உள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் இன்று (பிப்ரவரி 24) காலை புதுடில்லிக்கு மீண்டும் திருப்பிவிடப்பட்டது.
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடங்கியுள்ள நிலையில், உக்ரேனின் ஆகாயவெளி மூடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விமானம் உக்ரேனில் தரையிறங்க முடியாமல் போனது.
முன்னதாக 182 இந்தியர்களைக் கொண்டு சிறப்பு விமானம் உக்ரேனிலிருந்து புதுடில்லியை வந்தடைந்தது.
உக்ரேனில் சிக்கியுள்ள 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்கும் முயற்சியை இந்திய அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.
இவர்களில் பெரும்பாலோர் உக்ரேனில் மருத்துவப் பள்ளிகளில் பயில்கின்றனர்.
இந்த வாரம் மட்டும் உக்ரேனுக்கு நான்கு சிறப்பு விமானச் சேவைகளப் பறக்க இந்தியா திட்டமிட்டிருந்தது.
ஆனால் உக்ரேனின் ஆகாயவெளி மூடப்பட்டிருப்பது மீட்புப் பணிகளுக்குச் சவாலாக அமைந்துள்ளது.

