புதுடெல்லி: உக்ரேனில் உள்ள இந்தியர்கள் நிலை குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாக இந்திய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உக்ரேனில் 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களுடைய நிலை குறித்து அறிய தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியர்களை மீட்க சென்ற ஏர் இந்தியா விமானம் குண்டுவீச்சு காரணமாக திரும்பி வந்து விட் டது. இதனால் இந்தியர்களின் மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரேன் 'நேட்டோ' அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நேட்டோவில் உக்ரேன் சேர்வது தனது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று ரஷ்யா வலியுறுத் தியது. இதையடுத்து உக்ரேன் எல்லையில் படைகளைக் குவித்த ரஷ்யா இப்போது முழு வீச்சில் போரைத் தொடங்கியுள்ளது.
கிழக்கு உக்ரேனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காண உதவுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இதற்கு உடனடியாக எந்தவிதமான பதிலையும் ரஷ்யா தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே உக்ரேனில் உள்ள தங்கள் நாட்டின் தூதர்களை பல நாடுகள் திரும்பப் பெற்று வருகின்றன. இதேபோன்று மாணவர்கள் உள்பட இந்தியர்களை நாடு திரும்ப இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள், குடிமக்கள் உள்பட பலரை ஏற்றிக் கொண்டு நாடு திரும்ப ஏர் இந்தியா விமானம் ஒன்றை உக்ரேனுக்கு இந்திய அரசு அனுப்பியது. அந்த விமானம் 241 பயணிகளுடன் உக்ரேனிலிருந்து டெல்லிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.
அந்த விமானம் 10.15 மணிக்கு இந்தியா வரவேண்டும். ஆனால், டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்திற்கு ஒன்றரை மணி நேரம் தாமதத்துடன் இரவு 11.30 மணிக்கு விமானம் வந்தடைந்தது.
உக்ரேனில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்தியர்களை நாடு திரும்பச் செய்யும் பணியில் இந்தியா முனைப்புடன் உள்ளது. உக்ரேனில் உள்ள இந்திய தூதகரத்தில் ஏராளமான மாணவர்கள் தாயகம் திரும்புவதற்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன.

