புதுடெல்லி: இந்தியாவிலேயே அதிக சட்டமன்ற உறுப்பினர்
களைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து வருகிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், இதுவரை நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ளன.
நான்காம் கட்ட வாக்குப்பதிவு கடந்த புதன்கிழமை 59 தொகுதிகளில் அமைதியாக நடைபெற்று முடிந்தது. இன்னும் மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அந்த மாநிலத்தில் தொங்கு சட்டமன்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து இது
குறித்த கருத்துகள் அதிகரித்து வருவதால் சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன.
பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய உத்தரப் பிரதேசத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி உருவானது. தனித்து போட்டியிடும் பகுஜன் (பிஎஸ்பி) மற்றும் காங்
கிரஸ் முறையே 3, 4வது இடங்களுக்கு தள்ளப்படும் நிலை.
முதல் இருகட்டத் தேர்தல்களில் ஜாட் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகள் அதிகமாக இருந்தன. இதன் பலனாக சமாஜ்வாடி கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சிக்கு கணிசமான தொகுதிகள் கிடைக்க வாய்ப்புகள் தெரிந்தன.
இதனால், பாஜக மூத்த தலை
வரும் மத்திய உள்துறை அமைச்
சருமான அமித் ஷா தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரிக்காக தம் கட்சியின் கதவுகள் திறந்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அதற்கு சிறிதும் வாய்ப்பில்லை என்று ஜெயந்த் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
அதேபோல், காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பாஜக ஆட்சியைத் தடுக்க முயற்சி செய்யும் கட்சிக்கு தங்கள் ஆதரவு இருக்கும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கூறினார்.
இவர்களது கருத்துகளை வைத்து, உத்தரப் பிரதேசத்தில் தொங்கு சட்டமன்றம் வரலாம் என்ற கருத்து வெளியாகி ஓய்ந்தது.
தற்போது 4 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் மீண்டும் தொங்கு சட்டமன்ற கருத்து அதிகரித்துள்ளது. டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரரம் செய்தபோது, ''ஆம் ஆத்மிக்கு எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என யாரும் கவலைப்படத் தேவையில்லை.
"ஏனெனில், தேர்தல் முடிவுகளில் தொங்கு சட்டமன்றம் ஏற்படும் நிலை வந்தால் பாஜக ஆட்சி அமைவதைத் தடுப்பவர்களுக்கு ஆதரவு அளிப்போம்,'' என்று உறுதியாகக் கூறினார்.

