பூக்கரெஸ்ட்: உக்ரேனில் சிக்கித் தவித்த 219 இந்தியர்களுடன் ருமேனியாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று மாலை கிளம்பியது.
ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து உக்ரேன் தனது வான் எல்லைகளை மூடியதால், அண்டை நாடுகள் வழியாக உக்ரேனில் உள்ள இந்தியர்களை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சாலை வழியாக உக்ரேன்-ருமேனியா எல்லையைச் சென்றடைந்த இந்தியர்கள், அதிகாரிகள் மூலம் ருமேனியாவில் உள்ள பூக்கரெஸ்ட் நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கிருந்து ஏர் இந்தியா விமானத்தில் புறப்பட்ட இவர்கள், இந்திய நேரப்படி நேற்று இரவு
8 மணியளவில் அந்நாட்டின் மும்பை நகரில் வந்திறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்றும் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 250 பேருடன் ஹங்கேரியில் இருந்து புறப்படும் மற்றொரு விமானம் இன்று காலை டெல்லியில் தரையிறங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, உக்ரேனில் உள்ள இந்தியர்கள் அங்குள்ள இந்தியத் தூதரகத்தின் அறிவுறுத்தல் இல்லாமல் நாட்டின் எல்லைப் பகுதிகளுக்குச் சென்றுவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
உக்ரேனில் கிட்டத்தட்ட 20,000 இந்தியர்கள் உள்ளதாகவும் அவர்களில் 4,000 பேர் கடந்த சில நாள்களில் நாடு திரும்பியதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சு கூறி உள்ளது.
இந்தியா புறக்கணிப்பு
இதற்கிடையே, உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் தோல்வியடைந்தது.
மொத்தமுள்ள 15 நாடுகளில் தீர்மானத்தை ஆதரித்து 11 நாடுகள் வாக்களித்துள்ளது. ரஷ்யா வீட்டோவைப் பயன்படுத்தி தோற் கடித்தது. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு சிற்றரசு ஆகிய மூன்று நாடுகள் தீர்மானத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தன. இதனால் அமெரிக்காவின் தீர்மானம் தோல்விஅடைந்ததாக ஐநா அறிவித்தது.
நடுநிலையைப் பேணுவதால், ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்களிக்கவில்லை என இந்தியத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரிட்டனில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பல நாடுகள் பங்கேற்கவுள்ள 'கோப்ரா வாரியர்ஸ்' எனும் போர் விமானப் பயிற்சியில் இந்திய விமானங்கள் பங்கேற்காது என இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.
இப்பயிற்சி மார்ச் 6 முதல் 27 வரை பிரிட்டனிலுள்ள வேடிங்டனில் நடைபெறுகிறது. இதில் 5 போர் விமானங்கள் பங்கேற்கும் என இந்திய விமானப் படை முன்பு அறிவித்திருந்தது.
காரணத்தைக் குறிப்பிட்டு கூறாதபோதிலும், உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள ராணுவத் தாக்குதல், அதுதொடர்பான நிகழ்வுகளே இந்த முடிவுக்கான காரணமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

