திருவனந்தபுரம்: வழியில் செல்பவர்கள் தன் வீட்டு மரத்தில் இருந்து மாங்காய் பறித்து சாப்பிடுவதற்கு வசதியாக வாசலில் கொக்கி ஒன்றை வைத்துள்ளனர் கேரள தம்பதி.
உமர் அவத்காட்டிலும் அவரது மனைவி கதீஜாவும் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களது வீட்டின் முன்பு ஒரு பெரிய மாமரம் ஒவ்வோர் ஆண்டும் காய்த்து குலுங்கும்.
இவர்களது வீட்டிற்கு அருகில் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கற்களை வீசி மாம்பழங்களைப் பறிக்க முயற்சி செய்வர். வீசப்படும் கற்கள் பலநேரங்களில் வீட்டினுள் வந்து விழும்.
இதைப்பற்றி சிந்தித்த உம்மர் இதற்கு ஒரு தீர்வைக் கண்டறிந்தார். அவர் தனது வீட்டின் வாசலில் ஒரு அறிவிப்பு பலகையையும் ஒரு கொக்கியையும் வைத்தார். அந்த அறிவிப்பு பலகையில், 'சாலையை நோக்கி சாய்ந்து கிடக்கும் மாம்பழங்கள் நாளைய குடிமக்களான பள்ளி மாணவர்களுக்கானது.
"மாம்பழத்தைப் பறிக்க வாயிலுக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள கொக்கியைப் பயன்படுத்தவும்," என்று எழுதப்பட்டுள்ளது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த மாணவர்கள் மாம்பழங்களை தினமும் பறித்துச் செல்கின்றனர். சில நேரங்களில் உமரும் மாணவர்களுக்கு மாம்பழம் பறிக்க உதவுகிறார். கடந்த ஆண்டும் உமர் இதுபோன்றே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

