செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
3e88e4e0-d443-4c87-a882-015d54b71519
-

ஆழ்துளைக் கிணற்றினுள் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த 4 வயதுச் சிறுவன் 26 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டான்.

திறந்தநிலையில் இருந்த அந்த ஆழ்துளைக் கிணற்றின் அருகே சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அதற்குள் தவறி விழுந்து 55 அடி ஆழத்தில் மண்ணில் சிக்கிக்கொண்டான். ராணுவ, காவல்துறையினர், மாவட்ட அதிகாரிகள் உள்பட பலரும் குழந்தையை மீட்க முயற்சி மேற்கொண்டனர். சிறுவன் சுவாசிப்பதற்காக ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழாய் மூலம் உயிர்வாயு செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவன் உயிருடன் மீட்கப்பட்டான்.

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

பெங்களூரூ: இரு பிரிவு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தங்களை ஹிஜாப் அணிந்து வகுப்பிற்குச் செல்ல அனுமதிக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவிகள் மனு தாக்கல் செய்தனர். இதுதொடர்பான விசாரணை 11 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், மேலும் சிலரின் வாக்குவாதத்தை எழுத்து மூலமாக தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைப்பதாக அறிவித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெலிகாப்டர் விபத்தில் பயிற்சி விமானி உட்பட இருவர் பலி

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரைப் பார்வையிடும் மக்கள்.

படம்: இணையம்

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் நலகொண்டா அருகே பயிற்சி ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மகிமா எனும் பெண் பயிற்சி விமானி உட்பட இருவர் மாண்டுவிட்டனர்.

நலகொண்டா மாவட்டத்தில் உள்ள பிளை ஏவியேஷன் பிரைவேட் லிமிடட் என்ற தனியார் விமானப் பயிற்சி நிலையத்தின் ஹெலிகாப்டர் துங்கதுர்தி கிராமம் அருகே விழுந்து எரிந்து சாம்பலானது. மிகவும் தாழ்வாகப் பறந்தபோது மின்சார கோபுரத்தில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது.

'85% ராணுவத் தளவாடங்கள் இந்தியாவில் வாங்கப்படுகின்றன'

அகமதாபாத்: இந்திய ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்களில், 85 விழுக்காடு இந்திய நிறுவனங்களிடம் இருந்தே வாங்கப்படுவதாக இந்திய ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே கூறியுள்ளார்.

இந்திய பாதுகாப்புத் தொழிலின் ஒட்டுமொத்த சூழல் அமைப்பையும் மாற்றுவதற்கு சென்னை, லக்னோவில் உள்ள பாதுகாப்பு தளவாட மையங்கள் உதவி புரிந்துள்ளன என்றும் அவர் சொன்னார். குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அவர் இவ்வாறு சொன்னார்.