அச்சத்தில் உக்ரேனில் தொழில்செய்யும் இந்தியர்கள்; நாடு திரும்புவோருக்கு வேலைவாய்ப்பு
புதுடெல்லி: உக்ரேன்மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரேனில் உள்ள 20,000 இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவர முன்னுரிமை அளிக்கப்படும் என்று இந்திய வெளியுறவு இணையமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
"உக்ரேனில் 18,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் 2,000 பேர் அங்கு வேலைசெய்து வருகின்றனர். கூடிய விரைவில் அவர்களை மீட்டு, இந்தியாவிற்கு அழைத்துவர முன்னுரிமை அளித்து வருகிறோம். இது மிகப் பெரிய பணி," என்று திரு முரளி கூறினார்.
இதுவரை 4,000 மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றி, பாதுகாப்பாக மீட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"எஞ்சியுள்ள 16,000 இந்தியர்களில் கிட்டத்தட்ட 2,000 பேர் போலந்து, ருமேனிய எல்லைகளை அடைந்துவிட்டனர். இன்னும் ஒரு சில நாள்களில் அவர்களை இந்தியா அழைத்து வருவோம்," என்றார் திரு முரளி.
கிழக்கு மற்றும் மேற்கு உக்ரேனில் உள்ள மாணவர்களுடன் தொடர்பில் இருந்துவருவதாகவும் அவர் சொன்னார்.
உக்ரேன் மாணவர் எண்ணிக்கையில் 25 விழுக்காட்டினருக்கும் மேல் இந்தியர்கள்தான் என்று அந்நாட்டின் கல்வி, அறிவியல் அமைச்சின் இணையத்தளம் கூறுகிறது.
இதனிடையே, உக்ரேனில் நடக்கும் சண்டையால் அங்கு தொழில்செய்து வரும் இந்தியர்கள் பலர் வேலை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், அங்கிருந்து நாடு திரும்பும் இந்தியர்கள் பிரதமரின் 'ஸ்வதேஷ்' திட்டத்தின்கீழ் வேலை தேடிக்கொள்ளலாம் என்று இணை அமைச்சர் முரளி தெரிவித்ததாக 'நியூஸ்18' செய்தி கூறுகிறது.
'வந்தே பாரத்' சிறப்பு விமானங்கள் மூலமாக நாடு திரும்பும் இந்தியர்களுக்கு, அவர்களின் தேர்ச்சிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளை வழங்குவதே 'ஸ்வதேஷ்' திட்டத்தின் நோக்கம்.
இதனிடையே, உக்ரேனில் சிக்கி இருக்கும் இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு வருவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உக்ரேனிலிருந்து இந்தியர்களை மீட்டுவருவதற்கான செலவுகள் அனைத்தையும் அரசாங்கமே ஏற்கும் என்று தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்தியர்களை விரைந்து மீட்க ஏதுவாக, உக்ரேனின் அண்டை நாடுகளுக்கு அதிகமான விமானங்களை இயக்க முடிவுசெய்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

