புதுடெல்லி: இம்மாதம் 21ஆம் தேதி உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்ட நிலையில், இந்திய மக்கள் அனைவரும் பெருமிதத்துடன் தங்கள் தாய்மொழியில் பேச வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார்.
உலகின் தொன்மையான மொழியாகத் தமிழ் விளங்குவதை அவர் குறிப்பிட்டார்.
"நம் தாய்மொழியில் நாம் பெருமிதத்துடன் பேச வேண்டும். ஒப்பிட முடியாத அளவிற்கு இந்தியா மொழிச் செழுமை கொண்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை, கட்ச் முதல் கொகிமாவரை நூற்றுக்கணக்கான மொழிகளையும் ஆயிரக்கணக்கான வட்டார வழக்குகளையும் தன்னகத்தே கொண்டு இந்தியா பேரழகுடன் மிளிர்கிறது. அவை ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்றாலும் பரஸ்பரம் ஒருங்கிணைந்தவை. பல மொழிகளானாலும் ஒரே உணர்வு. நூற்றாண்டுகளாக, ஒன்றிலிருந்து ஒன்று கற்றுக்கொண்டும், செம்மைப்படுத்திக்கொண்டு, ஒன்றையொன்று வளர்த்துக்கொண்டும் செழுமையுடன் திகழ்ந்து வருகின்றன," என்று பிரதமர் மோடி விளக்கமாகக் கூறினார்.
வானொலியில் நேற்று 86வது முறையாக 'மனத்தின் குரல்' நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு பேசினார்.
"தாயும் தாய்மொழியும் நம் வாழ்விற்கு நிரந்தர அடித்தளத்தை அமைத்துத் தருகின்றனர். தாயை எப்படிக் கைவிட மாட்டோமோ, அதேபோல நம் தாய்மொழியையும் விட்டுவிடக்கூடாது," என்றார் திரு மோடி.
உலகின் தொன்மையான தமிழ் மொழி இந்தியாவில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய புகழ்மிக்க மரபைக் கொண்டிருப்பதை நினைத்து ஒவ்வோர் இந்தியரும் பெருமைப்பட வேண்டும் என்றும் சொன்னார்.
இந்தியாவில் 121 தாய்மொழி வடிவங்கள் இருப்பதாகவும் அவற்றுள் 14 மொழிகளை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பேசுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இதனிடையே, கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து சிலைகள் கடத்தப்பட்டு, வெளிநாடுகளில் விற்கப்பட்ட நிலையில், சென்ற 2014ஆம் ஆண்டிலிருந்து 200க்கும் மேற்பட்ட சிலைகளை இந்தியா மீட்டுவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவற்றுள் சிலவற்றை மீட்க அமெரிக்கா, கனடா, ஹாலந்து போன்ற நாடுகள் உதவியதாகவும் பிரதமர் சொன்னார். அவற்றை இந்தியாவிற்கு மீட்டுவருவது இந்தியர்களின் கடமை என்றும் அவர் கூறினார்.
இம்மாதத் தொடக்கத்தில், சில ஆண்டுகளுக்குமுன் பீகாரிலிருந்து கடத்தப்பட்ட, ஆயிரம் ஆண்டுப் பழமையான அவலோகித்தேஸ்வர பத்மபானி சிலை இத்தாலியில் இருந்து மீட்டுக் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

