புதுடெல்லி: இந்தியாவின் ஆகப் பெரிய காப்புறுதி நிறுவனமான 'ஆயுள் காப்புறுதி நிறுவனத்தில் (எல்ஐசி)' 20 விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டிற்கு அந்நாட்டு அமைச்சரவை அனுமதி அளித்து இருக்கிறது.
உலகிலேயே மிகப் பெரிய மூன்றாவது காப்புறுதி நிறுவனமாக விளங்கும், பொதுத் துறை நிறுவனமான 'எல்ஐசி'யில் 5% பங்குகளை விற்று, ரூ.78,000 கோடி திரட்ட மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அதற்கான வரைவு அறிக்கையும் 'செபி' எனப்படும் இந்தியப் பங்குச் சந்தை வாரியத்திடம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
இந்நிலையில், 'எல்ஐசி' பொதுப் பங்குகள் விற்பனையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகளில் மாற்றம் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது,
இப்போது நடப்பிலுள்ள அந்நிய நேரடி முதலீட்டு விதிகளின்படி, பொதுத்துறை வங்கிகளில் 20% வரை அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கலாம். அந்த அடிப்படையில், 'எல்ஐசி'யிலும் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் நிகர சொத்து மதிப்பைக் கொண்ட 'எல்ஐசி'யில் 100,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்; 1.2 கோடிப் பேர் முகவர்களாக இருக்கின்றனர்.

