புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அன்றாடத் தொற்று எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளது.
நேற்று முன்தினம் புதிதாக 8,013 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியது. நாடு முழுவதும் 119 பேர் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.
பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்நூறு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.56% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்ட 102,601 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சனிக்கிழமை அன்றாடத் தொற்று எண்ணிக்கை 10,273ஆகப் பதிவாகி இருந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இது 22 விழுக்காடு குறைந்து, 8,013ஆகப் பதிவானது.
இதற்கிடையே, டெல்லியில் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து, அங்கு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் இனி பயணிகள் நின்றபடி பயணம் செய்ய முடியும்.
முகக்கவசம் அணியாமல் வெளியே செல்வோருக்கு விதிக்கப்பட்ட அபராதம் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து ஐந்நூறு ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என டெல்லி மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. அதில் திங்கட்கிழமை (நேற்று) முதல் கொரோனா கட்டுப்பாடுகளைத் தள்த்துவது என முடிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனியார் வாகனங்களில் செல்வோர் இனிமேல் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். எனினும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தல் நல்லது என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, கேரளாவில் உள்ள திரையரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகளை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அன்றாடத் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதை அடுத்து, அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
இதேபோல் மதுக்கூடங்களிலும் உணவகங்களிலும் நூறு விழுக்காடு இருக்கைகளை நிரப்பலாம் என அரசு தெரிவித்துள்ளது. எனினும், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது நல்லது என கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. வெள்ளிக்கிழமை அன்று அங்கு 3,581 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

