புதுடெல்லி: அனைத்துலகப் பயணிகள் விமானச் சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அடுத்த உத்தரவு வரும்வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று இந்தத் தடையை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய விமானப் போக்குவரத்து இயக்ககம் (டிஜிசிஏ) அறிவித்திருந்தது.
கொரோனா நெருக்கடி காரணமாக இந்தியாவில் இருந்து இயக்கப்படும் பயணிகளுக்கான அனைத்துலக விமானச் சேவைகள் அனைத்தும் கடந்த 2020 மார்ச் 23ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எனினும் 'ஏர் பபல்' எனப்படும் இரு நாடுகளுக்கு இடையேயான சில விதிமுறைகளுடன் கூடிய ஏற்பாட்டின் அடிப்படையில் 2020, ஜூலை தொடங்கி சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 45 நாடுகளுடன் இதற்கான உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பயணிகளுக்கான அனைத்துலக விமானச் சேவைகள் அனைத்தும் அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து இயக்ககம் அறிவித்துள்ளது.
எனினும், இந்த உத்தரவு அனைத்துலக சரக்கு விமான சேவைகளுக்கும் ஏற்கெனவே விமானப் போக்குவரத்து இயக்க கத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட விமானச் சேவைகளுக்கும் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

