உக்ரேனின் அண்டை நாடுகளுக்குச் செல்ல இருப்பதாகத் தகவல்
புதுடெல்லி: உக்ரேனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் நான்கு மூத்த அமைச்சர்களை உக்ரேனின் அண்டை நாடுகளுக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
உக்ரேனில் தற்போது 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்பது குறித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு வெளியுறவு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
மேலும், மூத்த அமைச்சர்கள் ஹர்தீப் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, வி.கே.சிங் ஆகியோரை உக்ரேனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரேனில் சுமார் 76 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் உள்ளனர். அவர்களில் நான்கில் ஒரு பங்கு மாணவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் அங்கு மருத்துவம் சார்ந்த படிப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
உக்ரேனின் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஸ்லோவாக்கியாவின் எல்லைப் பகுதிக்கு மாணவர்கள் வந்துவிட்டால் அங்கிருந்து அவர்களை மீட்டுவிடலாம் என இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே உக்ரேன், போலந்து எல்லைப் பகுதியில் சிக்கிஉள்ள மாணவர்கள், பத்திரமாக எல்லையைக் கடக்க பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலந்தில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

