புதுடெல்லி: விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் சம்பவங்களில் உயிரிழப்போர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை எட்டு மடங்காக உயர்த்தப்படும் என மத்திய நெடுஞ்சாலை, சாலைப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது உயிரிழப்போர் குடும்பங்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் நிலையில், அது ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்படும்.
மேலும், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கான தொகை ரூ.12,500ல் இருந்து ரூ.50 ஆயிரமாக வழங்கப்படும் என்றும் அந்த அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு எதிர்வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.
இதன் மூலம் கடந்த 1989 முதல் இதுநாள் வரை வழங்கப்பட்ட விபத்து சார்ந்த நிவாரணத் தொகைகள் மாறும் என்று சாலைப் போக்குவரத்து அமைச்சு செய்திக்குறிப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இழப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொகையை விடுவிக்கும் நடைமுறைக்கும் காலக்கெடு வகுக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையைச் செயல்படுத்த தேவைப்படும் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் இழப்பீடு வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
தவிர சாலை விபத்துகள் குறித்த விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடைமுறையை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சு வகுத்துள்ளதாகவும் இதன் மூலம் இழப்பீடுகள் விரைவாக வழங்கப்படும் என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் சம்பவங்களில் 536 பேர் பலியாகிவிட்டனர் என்றும் 1,635 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2020ம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 366,138 சாலை விபத்துகள் நிகழ்ந்ததாகவும் 131,714 பேர் பலியானதாகவும் அவர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகள், அவற்றில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது.
இந்நிலையில், விபத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுகள் குறைவாக இருப்பதாகவும் அவை உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

