புர்காவில் மறைத்து வைத்து தங்கம் கடத்த முயன்ற பெண் கைது
ஹைதராபாத்: 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தை 'புர்கா'வில் மறைத்து வைத்து கடத்த முயன்ற துபாயைச் சேர்ந்த பெண் கைதானார். நேற்று முன்தினம் ஹைதராபாத் விமான நிலையத்தில் அவர் சிக்கினார். முன்னதாக, தங்கத்தைச் சிறு பாசி மணிகளைப் போல் மாற்றி, அதன் மீது முலாம் பூசி, தனது புர்காவில் வைத்து தைத்துள்ளார் அந்தப் பெண். சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியபோது அவர் தங்கம் கடத்த முயன்றது தெரிய வந்துள்ளது.
முப்பது ஆளில்லா சிறிய ரக வானூர்திகளை வாங்க இந்தியா முடிவு
புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து முப்பது நவீன ஆளில்லா சிறிய ரக வானூர்திகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அவை சுமார் 35 மணி நேரம் இடைவிடாமல் பறக்கக்கூடியவை என்றும் சுற்றுக்காவல், உளவுப் பணிகளுக்குப் பயன்படுத்த ஏதுவானவை என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், குறிப்பிட்ட இலக்குகள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்த ஏற்றவை என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் அட்டாமிக்ஸ் என்ற நிறுவனம் இந்த வகை வானூர்திகளைத் தயாரிக்கிறது. முதன்முறையாக நேட்டோ அமைப்பில் இடம்பெறாத நாடான இந்தியாவுக்கு இந்த வானூர்திகளை விற்பனை செய்ய அந்நிறுவனம் முன் வந்துள்ளது. முதற்கட்டமாக, ஒப்பந்த அடிப்படையில் இரண்டு வானூர்திகளை இந்தியா ஏற்கெனவே பெற்றுள்ளது.
ஆப்கானுக்கு 2,500 டன் கோதுமை
புதுடெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படை யில் 2,500 டன் கோதுமையை அனுப்பி உள்ளது இந்தியா. லாரிகள் மூலம் அனுப்பப்பட்ட கோதுமை சனிக்கிழமையன்று ஆப்கானிஸ்தானைச் சென்றடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக உணவுத் திட்டத்தின் கீழ் இந்த உணவு தானியங்கள் அங்குள்ள மக்களுக்கு விநியோகிக்கப்படும்.
புற்றுநோயாளி பெற்ற கடனை அடைத்த கேரள வங்கி ஊழியர்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்ட பெண்மணி பெற்ற வீட்டுக் கடனை வங்கி ஊழியர்கள் ஒன்றுசேர்ந்து அடைத்துள்ளனர். அந்த பெண்மணி கடந்த 2015ஆம் ஆண்டு காலமானதை அடுத்து, அவர் பெற்ற கடனைத் தீர்க்கும் பொறுப்பை அவரது மகன் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், அவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது, வீட்டுக்கடனை வழங்கிய வங்கிக் கிளையின் ஊழியர்களுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து, மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் அனைவரும் தங்களால் இயன்ற தொகையை வழங்கி அந்தக் கடனை அடைத்துள்ளனர். வங்கி ஊழியர்களின் இந்தச் செயலைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர்.

