புதுடெல்லி: உலகம் முழுவதும் அனைத்துலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி 29 பெண்களுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் 'நாரி சக்தி புரஸ்கார்' என்றழைக்கப்படும் பெண் சக்தி விருதுகளை நேற்று வழங்கி கௌரவித்தார். இவர்களில் தமிழகப் பெண்கள் மூவர் அடங்குவா்.
2020ஆம் ஆண்டுக்கான விருதை தமிழகத்தின் கைவினைக் கலைஞரான ஜெயா முத்து, தோடா கைப்பின்னல் (எம்ப்ராய்டரி) கலைஞா் தேஜம்மா ஆகியோா் கூட்டாகப் பெற்றனர். 2021ஆம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலில் தமிழகத்தைச் சோ்ந்த மனநல மருத்துவரும் ஆய்வாளருமான தாரா ரங்கஸ்வாமியும் இடம்பெற்றுள்ளாா்.
மகளிர் தினத்தை முன்னிட்டு 2020-2021ஆம் ஆண்டுகளுக்கான 28 பெண் சக்தி விருதுகளை 29 பெண்களுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
தொழில்துறை, விவசாயம், கண்டுபிடிப்பு, சமூகப்பணி, கல்வி, கலை, இலக்கியம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் அசாதாரண பங்களிப்பை அளித்த பெண்களையும் நிறுவனங்களையும் அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது. சமூக தொழில்முனைவாளர் அனிதா குப்தா, பழங்குடியின செயல்பாட்டாளர் உஷாபென் தினேஷ்பாய் வாசவா, கண்டுபிடிப்பாளர் நசிரா அக்தர், இன்டெல்-இந்தியா நிறுவனத் தலைமை நிர்வாகி நிவ்ருதி ராய் உள்ளிட்டோர் பெண் சக்தி விருதுகளைப் பெற்றனர்.

