புதுடெல்லி: உக்ரேனில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பல்வேறு நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் மேற்கல்வி பெற்று வருவது தெரியவந்துள்ளது.
உக்ரேனில் சுமார் 18 ஆயிரம் இந்திய மாணவர்கள் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த பட்டப்படிப்புகளை அங்குள்ள பல்கலைக்கழகங்களில் படித்து வருகின்றனர்.
எந்தெந்த நாடுகளில் இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள் என்ற பட்டியலை மத்திய வெளியுறவு இணையமைச்சர் வி.முரளிதரன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஆக அதிகமாக ஐக்கிய அமீரக சிற்றரசில் சுமார் 2.19 லட்சம் இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். சுமார் 2.15 இந்திய மாணவர்களுடன் இந்தப் பட்டியலில் கனடா இரண்டாம் இடத்தில் உள்ளது.
முன்பெல்லாம் அமெரிக்காவில் மேற்கல்வி பெற வேண்டும் என்பதே இந்திய மாணவர்களின் விருப்பமாக இருந்தது. ஆனால் விசா கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு கடுமையாக்கியதை அடுத்து, அங்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போது அங்கு 2.11 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
92,383 இந்திய மாணவர்களை கொண்டுள்ள ஆஸ்திரேலியா நான்காம் இடத்திலும் 80,800 இந்திய மாணவர்களுடன் சவுதி அரேபியா ஐந்தாம் இடத்திலும் உள்ளன.
இங்கிலாந்தில் 55,465 மாணவர்களும் ஓமன் நாட்டில் 43,600 மாணவர்களும் உள்ளனர்.
எட்டாம் இடத்தில் உள்ள நியூசிலாந்தில் 30,000 இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். ரஷ்யாவில் தற்போது 16,500 இந்திய மாணவர்கள் உள்ளனர் என்று இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.