புதுடெல்லி: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது நல்லதொரு யோசனை என தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
எனினும், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டால் மட்டுமே இந்த யோசனை சாத்தியமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தேர்தல் ஆணையம் அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்குத் தயாராக உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய, மாநிலத் தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.
"அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தல்கள் தொடர்பாக 2,270 வழக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தல் ஆணையத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுதான்.
"'உங்கள் வேட்பாளரை அறிந்து கொள்ளுங்கள்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ள செயலி தேர்தல் ஆணையத்தின் வெற்றிகரமான முயற்சி.
"குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் குறித்து வாக்காளர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவேதான் நாங்கள் இந்த செயலியை உருவாக்கினோம்.
"இம்முறை ஐந்து மாநிலங்களில் போட்டியிட்ட 6,900 வேட்பாளர்களில் 1,600க்கும் மேற்பட்டவர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள்," என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.