குஜராத், இமாச்சலப் பிரதேச தேர்தல் கைகொடுக்கும், வெற்றிபெறலாம் என கணிப்பு
புதுடெல்லி: இந்தியாவில் அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலை அடுத்து மிக முக்கிய தேசிய கட்சியான காங்கிரஸ் நிலைமை மிகவும் பரிதாபமாக போய்விட்டது.
ஒரு காலத்தில் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் கோலோச்சிய அந்தக் கட்சி, இப்போது மூன்று மாநில அரசாங்களுக்குத் தோள் கொடுக்கும் வட்டார கட்சியாக ஆகிவிட்டது.
அதோடு, இரண்டே இரண்டு மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் கட்சி அரசியல் பலத்துடன் விளங்குகிறது.
ஜார்கண்டில் ஜேஎம்எம் அரசாங்கத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தருகிறது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே கட்சிக்கு அது ஆதரவு கொடுக்கிறது. தமிழ்நாட்டில் திமுக வின் அரசியல் கூட்டணிக் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது.
சத்தீஸ்கர், ராஜஸ்தானில் மட்டும் சொந்த அரசாங்கங்களுடன் காங்கிரஸ் கட்சி கொடி பறக்கிறது.
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் உத்தர காண்ட், கோவா ஆகிய இரு மாநில ஆட்சிகளையும் பாஜகவிடமிருந்து பறித்துவிடலாம்; பஞ்சாப்பை தக்கவைத்துக்கொள்ளலாம் என்று காங்கிரஸ் கட்சி கனவு கண்டது.
ஆனால் படுமோசமான தோல்வியைத்தான் காங்கிரஸ் காண முடிந்தது. மக்களவையில் வெறும் 53 உறுப்பினர்களுடன் காங்கிரஸ் காலம் தள்ளுகிறது. மேலவையில் அதன் பலம் குறைந்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு முடிவில் குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல் தனக்குச் சாதகமாக இருக்கும் என்று காங்கிரஸ் நம்புகிறது, கணிக்கிறது.
இந்திய அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி 2014 முதல் படுவீழ்ச்சியை கண்டு இருப்பதாக கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
இதே நிலைமை நீடித்தால் 2024ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் காணாமல் போய்விடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், பஞ்சாப்பில் அமோக வெற்றி பெற்று இருக்கும் ஆம் அத்மி கட்சி தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்று எதிர்க்கட்சியாக உருவெடுக்கக்கூடும் என்று அரசியல் பேச்சு அடிபடுவதால் காங்கிரஸ் பிரமுகர்கள் மேலும் கவலையில் ஆழ்ந்துவிட்டனர்.
இதனிடையே, அண்மைய அரசியல் தோல்விகள் பற்றி விவாதிக்கவும் இன்று தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் விவா திக்க வேண்டியவை குறித்து பேசவும் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நேற்று நடந்தது.
சோனியா, ராகுல் ராஜினாமா செய்ய மறுத்ததாகவும் உள்கட்சி தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டதாகவும் தெரியவந்தது. செயற்குழுக் கூட்டமும் நேற்று நடக்கவிருந்தது.

