திருமலை: இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பற்றி இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. அந்த மாநிலத்தில் திருப்பதி பேரூர் பகுதியில் ராஜலட்சுமி என்ற மாது தனது 10 வயது மகனுடன் வசித்து வந்தார்.
தனியார் கல்லூரியில் பேராசிரியாக பணிபுரிந்த ராஜலட்சுமி, இம்மாதம் 8ஆம் தேதி உலக மகளிர் தினத்தன்று வீட்டில் கால் தடுக்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டு மாண்டுவிட்டார்.
ஆனால் தன்னுடைய தாயார் மரணமடைந்துவிட்டதை அறியாத ஷாம் கிஷார் என்ற அந்த பையன், தனக்குத் தன் தாயார் சொல்லி கொடுத்தபடி தானே அடுப்பை ஏற்றி சாதம் வடித்தார். அதை தன் தாயாருக்கு ஊட்டிவிட்டார்.
தாயார் கோபமடைந்துவிட்டதாகவும் அதனால்தான் அவர் சாப்பிடவில்லை என்றும் நம்பிய சிறுவன், தாயின் சடலத்துடன் இரவில் உறங்கி காலையில் எழுந்து வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று வந்தான். வீட்டில் இருக்கையில் தொடர்ந்து தாயின் சடலத்திற்கு சாதம் ஊட்ட முயற்சி செய்தான்.
இப்படியே ஐந்தாவது நாளாக அந்தச் சிறுவன் பள்ளிக்குச் சென்றபோது அவன் மீது துர்நாற்றம் வீசியது. அதை அடுத்து பள்ளிக்கூட ஆசிரியர்களும் அதிகாரிகளும் ராஜலட்சுமியின் சகோதரரைத் தொடர்புகொண்டனர்.
அவர் சகோதரியின் வீட்டிற்குச் சென்று அங்கு அவரது உடலைப் பார்த்ததும் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
அதிகாரிகள் அந்த மாதின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். சிறுவன் ஷாம் கிஷா ருக்கு மனநிலை கோளாறு உண்டு என்று உறவினர்கள் கூறினர்.

