கொரோனா இழப்பீடு: நீதிமன்றம் கவலை
புதுடெல்லி: கொரோனா இழப்பீடு பெறுவதற்கு போலிச் சான்றிதழ் வழங்குவதாக வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 50,000 இழப்பீடு தர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இழப்பீடு தருமாறு நீதிமன்றம் சொல்லவில்லை என்று சுட்டிக்காட்டி உள்ளனர். எனவே, இழப்பீடு பெற போலி ஆவணங்கள் அளிக்கப்படுவது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடுவது அவசியமாகிறது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
48 தொகுதிகளில் ஐந்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பறிபோனது வெற்றி
லக்னோ: உத்தரப் பிரதேச தேர்தலில் 48 தொகுதிகளில் சமாஜ்வாடி, பாஜக வேட்பாளர்கள் ஐந்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி கண்டுள்ளனர். சமாஜ்வாடி வேட்பாளர்கள் 25 பேரும் பாஜக வேட்பாளர்கள் 18 பேரும், அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த இரு வேட்பாளர்களும் ஐந்தாயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தனர். தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட விவரங்களின் மூலம் இது தெரியவந்துள்ளது.
உடைக்க முடியவில்லை: ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்றனர்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்கச் சென்றவர்கள், அங்கிருந்த இயந்திரத்தையே தூக்கிச் சென்றுவிட்டனர். அங்குள்ள ஆல்வார் மாவட்டம், திஜாரா நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்துக்குள் சனிக்கிழமை இரவு புகுந்த கொள்ளையர்களால் இயந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதையடுத்து அந்த இயந்திரத்தைப் பெயர்த்து எடுத்து தூக்கிச் சென்றனர். அதில் சுமார் 26 லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. கொள்ளை யர்கள் இயந்திரத்தை தூக்கிச் செல்லும் காட்சி அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி உள்ளது. அதை வைத்து அவர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 9,302 டெட்டனேட்டர்கள் பறிமுதல்
திருவனந்தபுரம்: கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 9,302 டெட்டனேட்டர்களும் வெடி பொருள்களும் சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் வாழப்பாடி அருகே வந்து கொண்டிருந்த லாரி ஒன்று, சாலையோரம் உள்ள ஒரு வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், அதை சோதனையிட்டபோது அதில் ஏராளமான டெட்டனேட்டர்கள் இருப்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதால் அவை பறிமுதல் செய்யப்பட்டன.
மதுக்கடை மீது கல்வீசிய உமா பாரதி
போபால்: மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் நடைபெற்ற போராட்டத்தின்போது அம்மாநில முன்னாள் முதல்வர் உமா பாரதி கலந்துகொண்டு, மதுக்கடை மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மது விற்பனையைத் தடை செய்யா விட்டால் அடுத்தகட்ட போராட்டம் அறிவிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். மதுக்கடைகளை எதிர்த்து போராட்டம் நடைபெறும் என கடந்த ஆண்டே அவர் அறிவித்து இருந்தார்.

