கோல்கத்தா: பிரபல தொலைக்காட்சி நடிகை புத்தகக் கண்காட்சியில் 'பிக்பாக்கெட்' அடித்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டார். இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட மேற்கு வங்க மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோல்கத்தாவில் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.
நேற்றுமுன்தினம் கண்காட்சிக்கு வந்த சிலர் திடீரென தங்களுடைய 'மணி பர்ஸ்'களைக் காணவில்லை என்று கண்காட்சி ஏற்பாட்டாளர்களிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர், கண்காட்சி நடந்த திடலின் முக்கிய நுழைவாயிலை மூடுமாறு உத்தரவிட்டனர். பின்னர் அங்கிருந்த அனைவரது உடைமைகளும் சோதிக்கப்பட்டன.
தொலைக்காட்சி நடிகை ரூபா தத்தாவும் (படம்) அன்று கண்காட்சிக்கு வந்திருந்தார். காவல்துறையினரின் வருகையை எதிர்பார்க்காத அவர், தாம் திருடிய 'மணிபர்சு'களை தனக்கு அருகே இருந்த குப்பைக்கூடைக்குள் வீசி, அவற்றை மறைக்கப் பார்த்துள்ளார். இதைக் கவனித்த காவலர்கள், குப்பைக் கூடையில் இருந்தவற்றைக் கீழே கொட்டியபோது, அதிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட பர்சுகள் விழுந்தன. இதனால் ரூபா தத்தா வசமாக சிக்கினார். அவரிடம் இருந்து ரூ.65,760 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் முப்பது பேரிடம் இருந்து திருடியதாக ஒப்புக்கொண்டார். மேலும் பல்வேறு இடங்களில் அவர் இவ்வாறு கைவரிசை காட்டியதும் தெரியவந்துள்ளது. தாம் திருடிய பொருள்கள், ரொக்கப் பணம் குறித்த விவரங்களை டைரி ஒன்றில் அவர் எழுதி வைத்துள்ளார்.