கபடி வீரர் ஒருவர் மர்மகும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்தது.
பஞ்சாப்பைச் சேர்ந்தவர் அனைத்துலக கபடி வீரர் சந்தீப் சிங் நங்கல், 40. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கபடி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார்.
ஜலந்தர் நகரில் கபடி போட்டி ஒன்றில் அவர் நேற்று பங்கேற்றார். அப்போது அங்கே வந்த அடையாளம் தெரியாத மர்ம கும்பல் திடீரென சந்தீப் நங்கலை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இதில் சந்தீப் சிங் நங்கலின் தலை மற்றும் மார்பு பகுதியில் 20க்கும் மேற்பட்ட குண்டுகள் பாய்ந்ததில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளன.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோல்ஃப் உபகரணங்கள் மற்றும் கூட்டமைப்புடன் சந்தீப் நங்கலுக்கு இருந்த முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
பஞ்சாப்பில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும் கபடி ரசிகர்களிடையே ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சந்தேக நபர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


