பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்விக் கழகங்களில் பயிலும் மாணவிகள் தலையங்கி அணிந்து வகுப்புக்கு வருவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை அம்மாநிலத்தின் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் அரசின் சீருடைச் சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே எனவும் உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"இளமைப் பருவம் என்பது எளிதில் தாக்கத்துக்கு உள்ளாகக் கூடியது. இந்தப் பருவத்தில் மாணவர்களின் அடையாளமும், சிந்தனையும் மாறக்கூடியது. இளம் மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறதோ அதன்பால் எளிதில் ஈர்க்கப்படுவார்கள். அவர்கள் இனம், மதம், மொழி, சாதி, இடம் சார்ந்த தங்கள் சுற்றுப்புறக் கருத்துகளால் ஈர்க்கப்படலாம். அதனால், இத்தகைய தடை உத்தரவு என்பது பிரிவினையைத் தூண்டும் நிலவரங்களில் இருந்து பாதுகாப்பான சூழலை உருவாக்கித்தர அவசியமாகிறது. இந்தச் சூழலில் மாணவர்களுக்குச் சீருடை என்பது கட்டாயமாகிறது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் அதன் தீர்ப்பில் தெளிவுபடுத்தியது.
உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் தலை அங்கி அணிந்து வகுப்புக்கு வந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் அந்த கல்லூரியின் முதல்வர் மாணவிகள் தலையங்கி அணிந்து வகுப்புக்கு வருவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டார். இதைக் கண்டித்து முஸ்லிம் மாணவிகள் சிலர் அதே கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
அந்தப் போராட்டத்தையடுத்து இந்து மாணவ, மாணவியரில் சிலர் காவித் துண்டு அணிந்து வந்தனர். இந்த விவகாரம் உடுப்பி மட்டுமின்றி சிவமொக்கா, பல்லாரி, மண்டியா, விஜயாப்புரா, பெலகாவி, துமகூரு, சிக்மகளூரு என்று மாநிலம் முழுவதும் பரவியது.
கடந்த மாதம் 8ஆம் தேதி சிவமொக்கா, தாவணகெரே உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதனால் மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டது. இந்தப் பதற்றத்தைத் தணிக்க பள்ளிகளும் கல்லூரிகளும் தற்காலிகமாக மூடப்பட்டன.
இதற்கிடையே மாநில அரசின் பள்ளி கல்வித்துறை, மாணவர்கள் சீருடை தவிர மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வரத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், தலை அங்கி விவகாரம் குறித்த பல்வேறு மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அரசின் சீருடைச் சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே. எனவே பள்ளி வகுப்புகளில் தலை அங்கி அணிவதற்கான தடை உத்தரவு தொடரும் என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
சீருடையின் தேவை என்பது அரசியலமைப்பின் 19(1)(a)இன் கீழ் கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமைக்கு ஒரு நியாயமான கட்டுப்பாடு, பள்ளிச் சீருடையை பரிந்துரைப்பது என்பது ஒரு நியாயமான கட்டுப்பாடு மட்டுமே, அதை மாணவர்கள் எதிர்க்க முடியாது. இந்த விவகாரத்தில் அரசாணை வெளியிட மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை 'கேலிக்குரியது' என்று என காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். இது குறித்து மெகபூபா முப்தி, "கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது," என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.
இந்த உத்தரவுக்கு கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கல்வி நிலையங்களில் தலை அங்கி அணிய தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
மனுதாரர்களில் ஒருவரின் வழக்கறிஞரான ஏ.எம் தார், தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், பெங்களூருவில் பொதுவிடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்கோ போராட்டங்கள் நடத்தவோ தடை விதிக்கப்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து வன்முறைகள் வெடிக்காமல் இருக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆயுதப் படை, அதிரடிப்படை உள்ளிட்ட காவல்துறையின் அனைத்துப் பிரிவினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு கன்னட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
பெங்களூரில் ஊரடங்கு

